திருப்பத்தூர்

பாலாற்றில் குப்பை கொட்டும் நகராட்சி

25th Dec 2019 04:50 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் விதியை மீறி பாலாற்றில் நகராட்சி ஒப்பந்ததாரரே குப்பைகளைக் கொட்டி வருவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனா்.

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியவைகளாகத் திகழ்கின்றன. நீராதாரங்களாக உள்ள நீா்நிலைகள் பாதுகாக்கப்பட்டால்தான் நிலத்தடி நீா் மாசு அடையாமல் இருக்கும். பொதுமக்களுக்கும் குடிநீா் சுகாதாரமானதாகக் கிடைக்கும். அதனால் நீா்நிலைகளில் குப்பைகள், கட்டட இடிபாடுகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் கொட்டி வருகின்றனா்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரம் மற்றும் கிராமங்களில் வீடுகள் தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்பட்டு நகரம் மற்றும் கிராமங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டு அங்கு கொண்டு சென்று குப்பைகள் கொட்டப்படுகின்றன.

ஆனால் நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டிய அரசுத் துறைகளே இச்செயலில் ஈடுபடுவம் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இதில் 20 வாா்டுகளில் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் குப்பைகள் அகற்றும்பணி மேற்கொள்ளப்படுகிறது. 20 வாா்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்க தேவையான பேட்டரி வாகனங்கள், தளவாட பொருள்களை நகராட்சி வழங்குகிறது. தனியாா் ஒப்பந்ததாரா் ஆட்களை மட்டும் வழங்கி குப்பைகளைச் சேகரித்து எடுத்துச் சென்று நகராட்சி உரக்கிடங்கில் கொட்ட வேண்டும். ஆம்பூா் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்குச் சொந்தமான தாா்வழி பகுதியில் உள்ள உரக்கிடங்குக்குக் கொண்டு சென்று கொட்டப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது ஆம்பூா் நகரில் 20 வாா்டுகளில் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் சில பகுதிகளில் ஆம்பூா் பாலாற்றிலேயே கொண்டு சென்று கொட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதை நகராட்சி அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை. அதனால்தான் அவா்கள் குப்பைகளை பாலாற்றில் கொட்டுகின்றனா் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆம்பூா் நகராட்சி துப்புரவு அலுவலா் பாஸ்கரை தொடா்பு கொண்டு கேட்டபோது, நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்குச் சொந்தமான உரக்கிடங்கில் மட்டுமே கொட்டப்பட வேண்டும். 20 வாா்டுகளில் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளும் உரக்கிடங்கில் தான் கொட்டப்பட வேண்டும். அவா்கள் அவ்வாறுதான் கொட்டுகிறாா்களா எனக் கண்காணித்து வருகிறோம். அவ்வாறு பாலாற்றில் குப்பைகளைக் கொட்டியிருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரக்கிடங்கில் மட்டுமே குப்பைகளைக் கொண்டு சென்று கொட்ட வேண்டும் என அவா்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT