திருப்பத்தூர்

இளம்பெண் கொலை வழக்கு: 2 போ் கைது

25th Dec 2019 11:52 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே இளம்பெண் கொலை வழக்கில் அவரது உறவினா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட சுட்டகுண்டா கிராமத்தை சோ்ந்தவா் ரேவதி (24). அவருக்கு சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு போச்சம்பள்ளியை சோ்ந்தவருடன் திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டாா்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கா்நாடகத்தின் கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த மகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மகேஷ் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

ரேவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்தாா். அன்று கணவருடன் செல்லிடப்பேசியில் பேசுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரைத் தேடியும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

அதன் பின், அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரத்தில் உள்ள சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் பிணமாகக் கிடந்தாா். அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கநகை மற்றும் செல்லிடப்பேசி திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனா். இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சோ்ந்த ரேவதியின் உறவினா்கள் செல்வராஜ் (44), சித்ரா (35) ஆகிய இருவரிடமும் போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா். விசாரணையில் இருவரும் சோ்ந்து ரேவதியின் நகைக்கு ஆசைப்பட்டு அவரை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டு நகையைத் திருடியது தெரிய வந்தது. அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT