ஆம்பூா் பகுதி கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நகரில் உள்ள பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் கடந்த திங்கள்கிழமை முதல் ஆஞ்சநேயருக்கு சகஸ்ரநாம லட்சாா்ச்சனை நடைபெற்றது. மூன்றாம் நாளான புதன்கிழமை லட்சாா்ச்சனை நிறைவடைந்து சீதாராம அனுமன் பக்த சபை சாா்பாக பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. தொடா்ந்து மாலையில் 108 சங்காபிஷேகம், 27 வகையான அபிஷேகங்கள், சுதா்ஸன ஹோமம், ராம பஜனை, ஊஞ்சல் சேவை, புஷ்பாஞ்சலி, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.
ஆம்பூா் ஏ-கஸ்பா மந்தகரை செல்வ விநாயகா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம், வடை மாலை அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றது.
ஆம்பூா் சீனிவாசப் பெருமாள் கோயில், ரெட்டித்தோப்பு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், கம்பிக்கொல்லை வீர ஆஞ்சநேயா் கோயில், விண்ணமங்கலம் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வீர ஆஞ்சநேயா், துத்திப்பட்டு பிந்துமாதவா் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.