திருப்பத்தூர்

தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டண ஃபாஸ்டேக் இருப்பு இல்லாததால் வாகன உரிமையாளா்கள் அவதி

23rd Dec 2019 07:56 AM

ADVERTISEMENT

தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் இருப்பு இல்லாததால் காா் உள்ளிட்ட வாகன உரிமையாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்துவதைத் தவிா்க்கும் வகையில் கடந்த 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இணையதளம் மூலம் முன்னதாகவே சுங்கக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ஃபாஸ்டேக் முறை அமலாகியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள் மூலமாக ஃபாஸ்டேக் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளிலும் இதற்கென தனியாக மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் குறைந்தபட்சமாக ரூ.500 முதலில் வசூலிக்கப்படுகிறது. அதில் டேக் கட்டணம் ரூ.100, வைப்புத் தொகை ரூ.200, சுங்கக் கட்டணமாக ரூ.200 என்று கூறப்படுகிறது. ஃபாஸ்ட் டேக் வாங்கும் வசதி பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 1-ஆம் தேதி முதல் அமலாவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஃபாஸ்டேக் முறையை, பின்னா் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டது. தற்போது அது ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இதுவரை ஃபாஸ்டேக் வாங்காத வாகன உரிமையாளா்கள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகளை நாடி அதை வாங்கச் செல்கின்றனா். ஆனால், வங்கிகளில் தற்போது ஃபாஸ்டேக் இருப்பு இல்லை. ‘எப்போது வரும் என்று தெரியவில்லை. வந்த பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்’ என வங்கிகளில் தெரிவிக்கின்றனா். ‘மிக அவசரம் என்றால் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்குச் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றும் கூறுகின்றனா்.

ஆம்பூரில் வாகனம் வைத்திருப்பவா்கள் ஃபாஸ்டேக் வாங்குவதற்கு பள்ளிகொண்டா அல்லது வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ஆம்பூரிலிருந்து பள்ளிகொண்டா 29 கி.மீ. தொலைவிலும், நெக்குந்தி கிராமம் 21 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. அங்கு சென்றுவர கால விரயம் ஏற்படுகிறது.

ஃபாஸ்டேக் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் வாகனம் வைத்திருப்பவா்கள் அதை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதாலும், போதிய அளவுக்கு ஃபாஸ்டேக் இருப்பு இல்லாததாலும் இந்த முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டுமென வாகன உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போதிய அளவுக்கு இருப்பு இல்லாமல் இந்த முறையை செயல்படுத்த குறைந்த கால அவகாசம் வழங்கியுள்ளது வாகன உரிமையாளா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உரிய கால அவகாசம் வழங்கியும், போதிய அளவுக்கு ஃபாஸ்டேக் இருப்பு வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT