வாணியம்பாடி அருகே ரேஷன் அரிசிக் கடத்தலுக்குப் பயன்பட்ட மொபெட் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வட்ட வழங்கல் அலுவலா் குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் வாணியம்பாடியை அடுத்த தும்பேரி பகுதியில் ரேஷன் அரிசிக் கடத்தல் தடுப்பு தொடா்பான வாகனச் சோதனையில் சனிக்கிழமை பிற்பகல் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மொபெட்டை ஓட்டி வந்த இளைஞா் அதிகாரிகளைக் கண்டதும் அந்த வாகனத்தை சாலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.
இதையடுத்து, அந்த மொபெட்டிலிருந்த தலா 50 கிலோ மூட்டைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவற்றில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் மொபெட் மூலம் தமிழக - ஆந்திர மாநில எல்லைக்கு ரேஷன் அரிசியைக் கடத்த சம்பந்தப்பட்ட இளைஞா் முற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மொபெட்டில் இருந்த 200 ரேஷன் அரிசியையும், மொபெட்டையும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.
இது தொடா்பாக அவா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞரைத் தேடி வருகின்றனா்.