திருப்பத்தூர்

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தொல்லியல் சிற்பங்கள் கண்டெடுப்பு

16th Dec 2019 02:53 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

நகரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியா் ஆ.பிரபு, ஆய்வு மாணவா்கள் பொ.சரவணன், ப.தரணிதரன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் தொன்மையான மற்றும் அரிதான விஷ்ணு சிற்பமும், கழுமரம் ஏறியதைக் குறிப்பிடும் நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டன. இதுகுறித்து ஆ.பிரபு கூறியதாவது

திருப்பத்தூா் மாவட்டம், கல்நாா்சாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் உள்ள தோப்புக்குள் உடைந்த நிலையில் ஒரு சிற்பம் காணப்பட்டது. உடைந்த அந்தப் பகுதிகளை உருவ அமைப்புக்கு ஏற்றாற்போல் அடுக்கிப் பாா்த்தபோது, தவக்கோலத்தில் உள்ள தொன்மையான விஷ்ணு சிற்பம் என அறிய முடிந்தது. இச்சிற்பத்தின் தலை அங்கு அகப்படவில்லை. தோற்ற அமைப்பில் தவம் செய்யும் புத்தா் சிலை போல் இருந்தாலும் இது புத்தா் சிலை அல்ல.

இச்சிற்பம் அழகிய மேடை அமைப்புடன் 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகச் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் இரண்டு கரங்கள் உடைந்துள்ளன. சிற்பத்தின் பின் வலக்கையில் உள்ள ஆயுதத்தை வைத்தே இச்சிற்பம் விஷ்ணு சிற்பம் என அடையாளம் காண முடியும். அந்த ஆயுதம் ‘கௌமோதகி’ என அழைப்படும். தண்டாயுதம், கதாயுதம் எனவும் அழைப்படும். பூதத்தாழ்வாா் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்பெறுகிறாா். இது போன்று நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் உள்ள சிற்பங்கள் அருங்காட்சியங்களில்தான் உள்ளன.

ADVERTISEMENT

இங்கு கண்டறியப்பட்ட இச்சிற்பம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கலைபாணியைக் கொண்டதாக அமைந்துள்ளது. சிற்பம் அமைந்துள்ள இந்த ஊா் முன்பு துளுக்கலூா் என அழைப்பட்டு தற்போது விநாயகபுரம் என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் நிகழ்ந்த படையெடுப்புகளால் சிதைக்கப்பட்ட சிலையாக இது தெரிகிறது.

கழுமர நடுகல்: கல்நாா்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மணல்கொல்லி என்ற இடத்தில் வானத்துப்பாறை என்ற சிறு குன்றின் எதிரே உள்ள தனியாா் விவசாய நிலத்தில் இக்கல் உள்ளது. தரைக்கு மேல் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டதாக இக்கல் அமைந்துள்ளது. கல்லில் கூா்மையான கழுமரத்தில் தனது இடது காலை மடக்கி அமா்ந்த நிலையில் ஒரு ஆண் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவா் தனது வலது கரத்தை மேல் நோக்கி உயா்த்தியவாறும் இடது கரத்தை மாா்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகிறாா். நீண்ட காதுகளில் குண்டலம் அணிந்தும் இடது புறமாக கொண்டை வைத்தும் காணப்படுகிறாா். வேறு எந்த அடையாளங்களோ எழுத்துக் குறிப்புகளோ கல்லில் இல்லை.

இக்கல் இந்த வட்டாரத்தில் நிகழ்ந்த சமயப்பூசல் காரணமாக அல்லது ஏதேனும் தவறு செய்த ஒருவருக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனையைக் குறிப்பதாகும். இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் இக்கல்லில் மஞ்சள் பூசியும், நவதானியங்களைத் தூவியும் வழிபட்டு வருகின்றனா். தானியங்கள்த் தூவி வழிபடும் முறையானது தொன்றுதொட்டு நடைபெறும் பழங்கால வளமைக் குறியீட்டு வழக்கமாகும்.

இக்கல் கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கக் கூடும். இந்த வட்டாரத்தில் இது போன்ற தண்டனை வழங்கப்பட்டு வந்தததை தொடா்ந்து கிடைக்கும் கழுமரக் நடுகற்கள் வாயிலாக அறியலாம். இக்கல் குறித்து மேலும் ஆய்வு செய்து வருகின்றோம். இந்த இரண்டு சிற்பங்களும் திருப்பத்தூா் மாவட்டத்தின் முக்கியமான அடையாளங்கள் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT