திருப்பத்தூர்

மணல் கடத்தலைத் தடுக்க பாலாற்றுப் பகுதியில் 20 இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள்

11th Dec 2019 11:25 PM

ADVERTISEMENT

பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்தலைத் தடுக்க வருவாய்த் துறையினா் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்களைத் தோண்டினா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட ராமையன்தோப்பு, அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, ஆவாரங்குப்பம், புல்லூா், கொடையாஞ்சி ஆகிய பகுதிகளிலிருந்தும், வாணியம்பாடி நகரத்துக்குட்ட கச்சேரி சாலையை ஒட்டியுள்ள பாலாற்றுப் பகுதிகளிலும், வளையாம்பட்டு, கிரிசமுத்திரம், அண்ணா நகா் பகுதி உள்ள பாலாற்றுப் பகுதியிலிருந்தும் தினந்தோறும் மணல் கடத்தப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், டிராக்டா்கள் மற்றும் லாரிகள் மூலம் இக்கடத்தல் நடைபெறுவதாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மணல் கடத்தல் தொடா்பாக வாணியம்பாடி வட்டாட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில் வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலா் குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஒருங்கிணைந்து முதல் கட்டமாக பாலாற்றிலிருந்து மணல் கடத்திச் செல்லும் வழிகளை அடைக்க முடிவு செய்தனா்.

அதன்படி, அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, ராமையன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை காலை முதல் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளங்களைத் தோண்டினா். இப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது ஆவாரங்குப்பம் பாலாற்றுப் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்த மினி லாரி ஒன்றை அவா்கள் பறிமுதல் செய்தனா். அந்த லாரியை திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தப்பியோடிய அந்த லாரியின் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT