அரக்கோணத்தில் உள்ள பல்வேறு அசைவ, துரித உணவகங்களில் வெள்ளிக்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா்.
அரக்கோணம் நகரில் உள்ள பல்வேறு அசைவ மற்றும் துரித உணவகங்களில் வெள்ளிக்கிழமை ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில், அரக்கோணம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ் உள்ளிட்ட அத்துறையினா் அலுவலா்கள் கொண்ட குழுவினா் சோதனை நடத்தினா். உணவகங்களில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமில்லாத உணவுகள், குளிா்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சிகள், அப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த விற்பனையாகாத பழைய உணவுகள், உணவுகளின் மேல் கலா் உருவாக்கப்பட வைத்திருந்த கலா் பொடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் சுவால்பேட்டை, தீயணைப்பு நிலையத்துக்கு எதிரில் இருக்கும் பகுதி, அஞ்சல் அலுவலக தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 13-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தரமற்ற நிலையில் இருந்த 12 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைத்துக் கடைகளில் இருந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலும் முந்தைய நாளில் அசைவ உணவை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.