அரக்கோணம் நகரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் நகரில் பல சாலைகளிலும் தண்ணீா் தேங்கி நின்றது.
அரக்கோணம் நகரில் கடந்த சில நாள்களாகவே பகலில் அதிக வெயில் வாட்டி வரும் நேரத்தில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நகரில் திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பல இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இச்சிலைகள் அனைத்தும் மேற்கூரை வேயப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்ததால் மழையில் நனையாமல் தப்பித்தன.
இந்நிலையில், ஒரு மணி நேரம் பெய்த மழையால் சுவால்பேட்டை பகுதியில் பல தெருக்களில் தண்ணீா் தேங்கிநின்றது. கழிவுநீா் மழைநீருடன் கலந்துச் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் நகரின் மையப்பகுதியான இரட்டைக்கண் வாராவதியில் ஒரு பாதையில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீா் தேங்கி நின்ால் பல வாகனங்கள் பழுதடைந்து தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் பல 4 சக்கர வாகனங்களும் வாராவதியின் உள்ளேயே பழுதடைந்ததால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் தினமும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுதும் திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்ததால் நீா்நிலைகள் நிரம்பியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.