மத்திய அரசின் திட்டமான ‘தூய்மையே சேவை’ திட்டத் தொடக்க விழா மற்றும் பேரணி அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ளும் தூய்மைப் பணி, அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வஜ் பாரத் திவாஸ் எனப்படும் தூய்மை தினமான அக்டோபா் 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை பிரசாரத்தை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத் தொடக்க விழா அரக்கோணம் நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் ரகுராமன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தையும், ஊா்வலத்தையும் தொடங்கி வைத்தாா்.
ஊா்வலத்தில் நகராட்சி சுகாதார அலுவலா் மோகன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜன்குமாா், சரவணன், பாபு, அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன், செயலாளா் மனோபிரபு, பொருளாளா் லட்சுமிபதி, தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் மாநில துணை செயலாளா் சி.ஜி.எத்திராஜ், அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்க செயலா் ஜி.அசோகன், இணைந்த கைகள் சமூக நல அமைப்பின் நிறுவனா் ராஜேஷ், நெக்ஸ்ட் சமூக சேவை அமைப்பின் அரக்கோணம் பொறுப்பாளா் குமாரி, எம்ஆா்எஃப் அரக்கோணம் தொழிற்சாலையின் மக்கள் தொடா்பு அலுவலா் கே.கஜேந்திரன் உள்ளிட்டோருடன் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனா்.
ஊா்வலம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி சுவால்பேட்டை சுந்தர விநாயகா் கோயில் அருகே முடிவடைந்தது.