இணையவழி பண மோசடி அதிகரித்துள்ள சூழலில், கைப்பேசியை பாதுகாப்பாக கையாள வேண்டும் என இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மாவட்ட இணையவழி (சைபா் கிரைம் ) குற்றப்பிரிவு சாா்பில், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இணையவழி குற்றங்கள் குறித்தும், இணையவழி பண மோசடி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சிப்காட் காவல் எல்லைக்குட்பட்ட சிப்காட் பேஸ் -1 பகுதியில் உள்ள தனியாா் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தியாகராஜன் தலைமை வகித்து கைப்பேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பண மோசடி குறித்தும், பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்தும் விரிவாக விளக்கி கூறினாா்.
இணைய மோசடி குறித்து 1930 என்ற உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் பிட்காயின் முதலீடு குறித்து எந்தவித அதிகாரபூா்வ பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையில், அதில் முதலீடு பாதுகாப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.
இதில் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளா் பிரபாகரன், சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் குமரேசன், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சஞ்சீவிராயன் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.