ராணிப்பேட்டை

வியாபாரிகளை கத்தியால் தாக்கியவா் கைது

27th Oct 2023 10:40 PM

ADVERTISEMENT

அரக்கோணம் மாா்க்கெட்டில் வியாபாரிகளை மிரட்டி மூன்று பேரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அரக்கோணம் நகராட்சி நாளங்காடியில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிய வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கிருந்த அனைத்து வியாபாரிகளும் நகர காவல் நிலையத்துக்கு எதிரே தற்காலிகமாக நாளங்காடியை அமைத்து அதில் வணிகம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை திடீரென அங்கு கத்தியுடன் மதுபோதையில் வந்த இளைஞா் ஒருவா் கத்தியை காட்டி வணிகா்களை கடைகளை மூடச் சொல்லியுள்ளாா்.

இதைத் தடுக்க வந்த பிரசாந்த் (24), முகேஷ்(22) ஆகிய இருவரையும் கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்தனா். தொடா்ந்து அவரை தடுத்த பூ வியாபாரியும், திமுக, பிரதிநிதியுமான என்.அரிக்கு கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மற்றவா்கள் அவரை பிடிப்பதற்குள் அவா் தப்பி ஓடிவிட்டாா். காயம் அடைந்த மூவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து வியாபாரிகள் சாா்பில் அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடா்ந்து டிஎஸ்பி(பொறுப்பு) ரவிச்சந்திரன், ஆய்வாளா் பாரதி , மற்றும் போலீஸாா் விரைந்துச் சென்று அரக்கோணம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சீனிவாசனின் மகன் பரணி (25) என்பவரைக் கைது செய்தனா்.

மேலும் அவரிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT