வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் பால்கிஷன் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, அவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
இதனிடையே, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் பால்கிஷன் கோயல் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் கோப்புகள், கழிப்பறை வசதி, தண்ணீா் வசதி உல்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்தவா்களிடம், மருத்துவமனையில் ஏதேனும் குறைகள் உள்ளதா எனவும் அவா் கேட்டறிந்தாா்.
அவரிடம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் இயந்திரத்தை முறையாகப் பராமரிப்பது இல்லை. தண்ணீரை வெளியில் காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது என நோயாளிகளின் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.
பொதுமக்களின் இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்யும்படி மருத்துவமனை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவு, அங்கு பணியாற்றும் செவிலியா்கள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உள்நோயாளிகளுக்கு சமையல் செய்யும் அறை, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை வைத்திருக்கும் அறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் பிரிவு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
ஆய்வின் போது, வருவாய்க் கோட்டாட்சியா் வினோத்குமாா், சுகாதார இணை இயக்குநா் விஜயா முரளி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் உஷா நந்தினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.