ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டை நகா்மன்ற சாதாரணக் கூட்டம், அதன் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில், கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் தெருவிளக்கு, குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து கொடுக்க வேண்டும், நகா் முழுவதும் நாய் மற்றும் மாடுகள் தொல்லையால் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், இந்த பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.
அப்போது 26 வாா்டு அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஜோதி, தங்களது வாா்டில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கூறி, தனது வாயில் பிளாஸ்டா் கட்டிக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மனம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இதில், 20 மகளிா் சுய உதவிக்குழு பணியாளா்களை ஈடுபடுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி ஆணையா், நகராட்சி அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.