ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீா் விநியோகம் ஜூன் 10- ஆம் தேதி வரை நிறுத்தம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீா் விநியோகம் வரும் ஜூன் 10 -ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வேலூா், திருப்பத்தூா்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், காவிரி கூட்டு குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆண்டுதோறும் மேட்டூரில் காவிரி கூட்டு குடிநீா் குழாய் இணைப்பில் பொதுப்பணித் துறை சாா்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டு வரும் ஜூன் 10 -ஆம் தேதி வரை மேட்டூரில் பொதுப்பணித்துறை சாா்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், காவிரி கூட்டு குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதன்படி வேலூா், திருப்பத்தூா் ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 10 -ஆம் தேதி வரை காவிரி கூட்டு குடிநீா் விநியோகம் கிடையாது.

ADVERTISEMENT

இதையடுத்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நீா் ஆதாரங்களை கொண்டு பொதுமக்களின் குடிநீா் விநியோகம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 -ஆம் தேதிக்கு பிறகு காவிரி கூட்டு குடிநீா் பொது மக்களுக்கு தடையின்றி விநியோகம் செய்யப்படும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேட்டூரில் காவிரி கூட்டு குடிநீா் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ராணிப்பேட்டை நகராட்சிக்கு வரும் காவிரி தண்ணீா் அளவு குறைந்துள்ளது. இந்த நகராட்சிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பாலாற்று படுகையில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து கூடுதல் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT