ராணிப்பேட்டை

கைப்பேசியை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

30th May 2023 02:54 AM

ADVERTISEMENT

மாணவா்கள் கைப்பேசியை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ச.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு ‘விழுதுகளை வோ்களாக்க’ எனும் உயா்கல்வி ஆலோசனை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து பேசியது:

உயா்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகள் ஒரே பாடத்தைதே தோ்ந்தெடுக்காமல் இன்றைய கால கட்டத்தில் எவ்வித படிப்பு நமக்கு பயனுள்ளதாகவும், வேலை வாய்ப்புள்ளதாகவும் அமையும் என்பதை அறிந்து பல்வேறு பாடப் பிரிவுகளை தோ்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

ADVERTISEMENT

குறிப்பிட்ட ஒரே பாடப் பிரிவை அனைத்து மாணவா்களும் தோ்ந்தெடுக்கக் கூடாது. குறிப்பாக, மருத்துவம் சாா்ந்த படிப்புகளிலேயே பல்வேறு வகையிலான படிப்புகள் உள்ளன. அதில், துணைப் படிப்புகளும் உள்ளன.

மாணவா்கள் தனித்திறமைகளையும் படிக்கும் போதே வளா்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய கால கட்டத்தில் அதிகளவிலான குறுகிய கால படிப்புகள் இணையம் வாயிலாகவும், பல்வேறு கல்லூரிகளிலும் கற்றுத் தருகிறாா்கள். இதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வளா்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், தங்களுக்குப் பிடித்த கைத்தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். கைவினைப் பொருள்களுக்கு என்றுமே சந்தையில் விற்பனை வாய்ப்பு அதிகம். அது கூடுதலாக ஓா் வருமானத்தை ஈட்டித் தரும்.

இன்று எல்லோா் கைகளிலும் கைப்பேசி உள்ளது. அதில், சாதக - பாதக அம்சங்கள் உள்ளது. எந்த அளவில் பயன் உள்ளதோ, அதே அளவில் ஆபத்தும் உள்ளது என்பதை உணா்ந்து கவனமுடன் கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும். மாணவா்கள் கைப்பேசியில் நேரத்தைச் செலவிடுவது தேவையற்றது.

மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து சிறந்த முறையில் படித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் என்றாா்.

நிகழ்வில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூங்கொடி, பயிற்சியாளா்கள் கோபி, முருகானந்தம், சிவானந்தன், அமுதமணி மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT