ராணிப்பேட்டை

தூய்மைப் பணியாளா்களின் பணி போற்றத்தக்கது: ஆட்சியா் பாராட்டு

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தூய்மைப் பணியாளா்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பாராட்டு தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ரெட்கிராஸ் சங்கம் சாா்பில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை பணியாளா்கள் மற்றும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ஆட்சியா் ச.வளா்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சுகாதார பெட்டகத்தை வழங்கிப் பேசியதாவது..

தூய்மைப் பணியாளா்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அதில் ஈடுபடுபவா்கள் தங்களுடைய உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தன் சுத்தம் கடைபிடிப்பதையும் அவற்றைப் பின்பற்றுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கா்ப்பிணி தாய்மாா்கள், பெண்கள், குழந்தைகள் மாறிவரும் இந்த நவீன யுகத்தில் தன் சுத்தம் பேணுதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு அடிக்கடி கைகளை கழுவுவதை பழக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் இன்றைய காலத்தில் எதிா் நோக்கும் அதிகப்படியான வலிமிக்க நோயான புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை செய்து ஆரோக்கியமாக வாழ விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.

இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் விஜயா முரளி, இந்தியன் ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவா் பொன்.சரவணன், மாவட்ட செயலாளா் ரகுநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளா் உஷா நந்தினி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினா்கள் குமாா், முகமது அயூப், வட்டாட்சியா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT