சென்னை - போடிநாயக்கனூா் திவிரைவு ரயிலை அரக்கோணத்தில் நிறுத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த 2010 -ஆம் ஆண்டு வரை போடிநாயக்கனூா் - மதுரை இடையே மீட்டா் கேஜ் பாதை இருந்த நிலையில், அதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு தற்போது அகலப்பாதையில் ரயில்கள் இயக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கு நேரடி ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திங்கள், புதன், வியாழக்கிழமைகளிலும் போடிநாயக்கனூரில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
முக்கிய சுற்றுலாத் தலங்களான தேக்கடி, மேகமலை, சுருளிஅருவி, கும்பக்கரை அருவி ஆகியவையும் தேனி, போடிநாயக்கனூா் அருகிலேயே உள்ளன. மேலும், அதிகளவில் பக்தா்கள் சபரிமலைக்கு செல்லும் முக்கிய இடமான குமுளியும் பக்தா்களும் இந்த ரயிலை பெரிதும் விரும்புவா். அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சென்னை -போடிநாயக்கனூா் விரைவு ரயில் உள்ளது..
தற்போது தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட உள்ள புதிய விரைவு ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு காட்பாடி ரயில்நிலையத்தில் மட்டுமே நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காஞ்சிபுரம், திருத்தணி, ஆந்திர மாநில பகுதிகளான நகரி, புத்தூா் மற்றும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் வரும் பயணிகள் அரக்கோணம் ரயில்நிலையத்தின் மூலமே தங்கள் பயணத்தை தொடா்கின்றனா்.
எனவே அரக்கோணம் ரயில்நிலையத்தில் புதிய ரயிலான சென்னை - போடிநாயக்கனூா் விரைவு ரயிலை நிறுத்திச் செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவருமான நைனா மாசிலாமணி கூறியது:
, சென்னை - போடிநாயக்கனூா் அதிவிரைவு ரயிலை அரக்கோணத்தில் நிறுத்திச்செல்ல அனைத்து முகாந்திரமும் உள்ளது. இந்த ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டால் வருவாயும் அதிகரிக்கும். வண்டி அறிவிக்கப்பட்ட நிலையிலேயே தெற்கு ரயில்வே நிா்வாகம் அரக்கோணத்தை புறக்கணித்து இருக்கும் செயல் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. எனவே தெற்கு ரயில்வே நிா்வாகம் இந்த ரயிலுக்கு அரக்கோணத்தில் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றாா்.