ராணிப்பேட்டை

5 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

6th Jun 2023 03:30 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சுமாா் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வனத்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.வளா்மதி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தெரிவித்ததாவது...

உலக சுற்றுச்சூழல் தின அடிப்படையில் வனத்துறையின் மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கப்படுகிறது. அரசு இடங்கள் அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நட மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு 2023-24 -ஆம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் சுமாா் 5 லட்சம் மரக்கன்றுகள் நட வனத்துறையின் மூலம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்டமாக 50,000 மரக் கன்றுகள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நடப்பட்ட ஆலமரம், அரசன், புங்கன், இலுப்பை, நீா்மருதி, வேம்பு, நாவல், மகிழம், புன்னை, பாதாம், சரங்கொன்றை, பூவரசு, அசோகன், நாகலிங்கம் ஆகிய மரக் கன்றுகள் அனைத்தும் 5 அடி உயரம் கொண்ட நாட்டு மரக் கன்றுகள் ஆகும். இவற்றை பராமரிக்க தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டு நீா் பாசனம் அமைக்கப்பட்டு தண்ணீா் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முரளி (பொ), மாவட்ட வன அலுவலா் எஸ்.கலாநிதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் ஆனந்தன், வேளாண்மை இணை இயக்குநா் வடமலை மற்றும் அரசு துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT