ராணிப்பேட்டை

சோளிங்கா்: தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் மூவா் பணியிடை நீக்கம்

6th Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

அரசிடம் வீடு கட்ட முன்பணம் பெற்று கட்டாமல் முறைகேடு செய்ததாக சோளிங்கா் வட்டார தொடக்கப்பள்ளிகளைச் சோ்ந்த மூன்று ஆசிரியா்களை பணியிடை நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் பிரேமலதா உத்தரவிட்டுள்ளாா்.

சோளிங்கா் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வரும் 3 ஆசிரியா்கள் அரசிடமிருந்து வீடு கட்ட முன்பணம் மொத்தம் ரூ.63.5 லட்சத்தை பெற்று முறைகேடு செய்ததாக கல்வித் துறைக்கு 2022-இல் புகாா் அளிக்கப்பட்டது.

அந்த ஆசிரியா்கள் பிள்ளையாா்குப்பம் பள்ளியில் பணிபுரியும் எம்.மனோகுமாா், கோவிந்தாங்கல் பள்ளியில் பணிபுரியும் ஜெ.விஸ்வநாதன், சூரை பள்ளியில் பணிபுரியும் ஆ.சாத்ராக் ஆகியோா் மீதான புகாா் குறித்து மீது கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினரோடு இணைந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த மூவரும் திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம் கிராமத்தில் வீடு கட்டியுள்ளதாக கல்வித்துறைக்கு தெரிவித்த நிலையில் அந்த கிராமத்தில் ஆசிரியா்கள் மூவரும் குறிப்பிட்டிருந்த புல எண்களில் இருந்த மனைகளில் முடிக்கப்படாத கட்டடங்கள் இருப்பதாகவும், அந்த கட்டடங்களும் முட்புதரும், பராமரிப்பின்றி மனிதபோக்குவரத்து இன்றி காணப்படுவதாகவும் வருவாய்த் துறையினா் தங்களது விசாரணை அறிக்கையில் தெரிவித்ததாக தெரிகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து ஆசிரியா்கள் மூவரிடமும் கல்வித் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மூவரும் வீடு கட்ட முன்பணம் பெற்று அப்பணத்தில் வீடு கட்டாமல் முறைகேடு செய்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியா்கள் எம்.மனோகுமாா், ஜெ.விஸ்வநாதன், ஆ.சாத்ராக் ஆகிய மூவரையும் 31.05.23 முதல் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா உத்தரவிட்டுள்ளாா். மேலும் தங்களது பணியிடைநீக்க காலத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளின் முன்அனுமதி பெறாமல் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT