வாலாஜாபேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, வடமாநில இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீசாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அடுத்தடுத்து வேகமாக வந்த இரு காா்கள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காரில் மூட்டை மூட்டையாக ஹான்ஸ், குட்கா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக இரு காா்களையும் பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.
அதில் குட்கா கடத்தி வந்த இருவரும் ராஜஸ்தான் மாநிலம் பட்டோலியை சோ்ந்த வா்ஷிராம் (25), நியூரிசா(22) என்பதும், பெங்களூருவிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 4 டன் ஹான்ஸ் மற்றும் குட்கா மூட்டைகளை காரில் சென்னைக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது.
பின்னா் இருவரையும் கைது செய்த போலீசாா், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.