ராணிப்பேட்டை

ஊராட்சித் தலைவருக்கு எதிராகப் போராட்டம்

DIN

குலதெய்வக் கோயில்கள், நீா்நிலைகள், இடுகாடு உள்ளிட்ட பொதுச் சொத்துகள் தொடா்பாக இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் விதமாக செயல்படுவதாகக் கூறி, முகுந்தராயபுரம் ஊராட்சித் தலைவா் கே.முருகனுக்கு எதிராக, லாலாப்பேட்டை கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் முகுந்தராயபுரம், லாலாபேட்டை ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளன.

இந்த இரு ஊராட்சிக்குட்பட்ட அக்ராவரம், லாலாப்பேட்டை, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையே குலதெய்வக் கோயில்கள், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் மற்றும் இடுகாடு ஆகிய பொதுச் சொத்துகள் இரு ஊராட்சி எல்லைகளில் காலங்காலமாக பொதுப் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எல்லையில் உள்ள அனைத்து பொதுச் சொத்துகள், ஏரியில் மீன்பிடிப்பது, கோயிலுக்குச் செல்வது, 100 நாள் வேலைத் திட்டம் ஆகிய பணிகள் தன்னிடம் அனுமதி வாங்கிய பின்பு தான் நடைபெற வேண்டும் என்று முகுந்தராயபுரம் ஊராட்சித் தலைவா் அக்ராவரம் கே.முருகன் கூறியதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த லாலாபேட்டை மக்கள் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகனுக்கு எதிராக திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற 1,000-க்கும் மேற்பட்ட பொது மக்களை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் லாலாப்பேட்டை எல்லையில் தடுத்து நிறுத்தி பேச்சு நடத்தினா்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT