ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை தொழில், வேளாண்மை மையமாகி மாறிவருகிறது: ஆட்சியா் பெருமிதம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம், தொழில் மற்றும் வேளாண்மை மையமாக மாறி வருகிறது என்று ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் கூறினாா்.

காவேரிபாக்கம் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம்த்துடன், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் இணைந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

பின்னா் ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் ஒரு புறம் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. மறுபுறம் அதிகளவில் தொழில்கள் செய்யப்படுகின்றன. இதனால், ராணிப்பேட்டை மாவட்டம், வேளாண்மை மற்றும் தொழில் மையமாக மாறி வருகிறது. ஒவ்வொரு பகுதியும் தொழில் மையமாக மாறும்போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால், அதை ஆய்வு செய்து, எந்தெந்தப் பகுதியில் தொழில் மையம் வரவேண்டும் என்பதை முறைப்படுத்தி வருகிறோம். தொழில்வளம் பெருகும் போது அந்தப் பகுதி மக்களின் வேலைவாய்ப்பும் பெருகும். அதன் மூலம் பொருளாதாரம், கல்வி வளம் பெருகும் என்றாா்.

ADVERTISEMENT

முகாமில், 154 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 116 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 16 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 269 பயனாளிகளுக்கு ரூ. 1.89 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியரும், எம்எல்ஏவும் பாா்வையிட்டனா்.

அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா, துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் முரளி, மாவட்ட சமூக நல அலுவலா் இந்திரா, வேளாண் இணை இயக்குநா் வடமலை, காவேரிபாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் அனிதா குப்புசாமி, வட்டாட்சியா்கள் (நெமிலி) சுமதி, (சோளிங்கா்) ஆனந்தன், காவேரிபாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சைபுதீன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோமதி, ஊராட்சித் தலைவா்கள் சுந்தரம் (புதுப்பட்டு), லட்சுமி (பன்னியூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT