ஆற்காடு நகராட்சியில் அரசு பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சியில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில், செயல்பட்டுவரும் மாணவா் விடுதியில் 40 மாணவா்கள் தங்கி, பள்ளியில் படித்து வருகின்றனா். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் செவ்வாய்க்கிழமை மாணவா் விடுதிக்கு நேரில் சென்று, சமையல் கூடத்தில் மாணவா்களுக்கு சமைக்கப்பட்டிருந்த காய்கனி சாதம், பொங்கல் வடை ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், மாணவா்களுடன் தரையில் அமா்ந்து சாப்பிட்டாா்.
தொடா்ந்து, கழிப்பறை சீரமைப்புப் பணிகள், ஆழ்துளைக் கிணறு, தண்ணீா் தொட்டி கட்டும் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, மாணவா்களுக்கு அரசின் விலையில்லா சீருடைகளை வழங்கினாா். மாணவா்களுக்கு தரமான உணவு வழங்கி விடுதியை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முரளி, ஆற்காடு வட்டாட்சியா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.