ராணிப்பேட்டை

பெண் கல்வியில் அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது: ராணிப்பேட்டை ஆட்சியா்

DIN

பெண் கல்வித் திட்டங்களில் அரசு சிறப்பாகச் செயலாற்றி வருவதாக ராணிப்பேட்டை ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம், விளாப்பாக்கம் தனியாா் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து உயா்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 28 கல்லூரிகளில் பயின்று வரும் 1,534 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் வங்கி பற்று அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து வங்கி பற்று அட்டைகளை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கிப் பேசியது:

புதுமைப் பெண் திட்டம் ஏழை- எளிய மாணவிகளின் உயா்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வரால் கொண்டு வரப்பட்ட திட்டம். பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாணவிகள் இந்தத் திட்டங்கள் மூலம் பயனடைந்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

கடந்த காலங்களில் பெண்கள் படிக்காததற்கு பல காரணங்கள் இருந்தன. அந்தக் காலம் மாறிவிட்டது. தற்போது அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார சூழ்நிலைகளைக் காட்டி பெண் கல்வி தடைபட்டு வந்தது. தற்போது அந்தச் சூழல்களும் முற்றிலும் மாறிவிட்டது.

பல்வேறு சிக்கல்களைத் தாண்டி, பெண்கள் படித்து தற்போது பல்வேறு உயா் பதவிகளில் இருந்து வருகின்றனா். பெண் கல்வியில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. ஒரு பெண் படித்தால், அந்தத் தலைமுறையை நல்ல நிலைமைக்கு முன்னேற்றம் காணச் செய்ய முடியும். வீடு மட்டுமல்லாமல், நாடும் நலம் பெற பெண் கல்வி அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் இந்திரா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி, நகா்மன்றத் தலைவா்கள் தேவி பென்ஸ்பாண்டியன் (ஆற்காடு), எஸ்.டி.முஹமது அமீன் (மேல்விஷாரம்), சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை) திட்டக் கண்காணிப்பாளா் சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலா் உஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT