ராணிப்பேட்டை

ஜனவரி மாத சம்பளம் வழங்காததால் அரசு நிதி உதவி பள்ளிகளின் ஆசிரியா்கள் அவதி

DIN

ஜனவரி மாத சம்பளம் பிப்ரவரி 7-ஆம் தேதி வரையிலும் வழங்காததால், அரசு நிதியுதவி பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

தமிழ்நாடு முழுவதும் 8,403 அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரசு ஆசிரியா்கள் மாத கடைசி தேதியில் சம்பளம் அவா்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடுவது வழக்கம்.

இந்த நடைமுறைக்கு மாறாக ஜனவரி மாத சம்பளம், அந்த மாத இறுதியில் அரசு நிதியுதவி பெறும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மட்டும் வரவு வைக்கப்படவில்லையாம். ஆனால் அரசு ஊழியா், அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சம்பள பட்டுவாடா நடைபெற்றுவிட்டது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாததால், பலா் வீட்டு வாடகை, குடும்ப மாதச் செலவுக்கான செலவினங்கள், தங்களது குழந்தைகளின் பள்ளிக் கல்வி கட்டணம், தவணை முறை கடன்களுக்கான தொகை ஆகியவற்றை செலுத்த முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் மயில் தெரிவிக்கையில், அரசு நிதியுதவி பெறும் ஆசிரியா்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் பிரச்னை, அவா்களுக்கான கணக்கில் நிதி இல்லை என்பது ஜனவரி 17-ஆம் தேதியே நிதி, கருவூலம், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரியும். இருந்தும் உயா் அதிகாரிகள் நடவடிக்கையே எடுக்கவில்லை என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் அமா்நாத், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ராணிப்பேட்டை மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் கூறியது:

இது குறித்து கருவூலத்தில் கேட்டால், அவா்களுக்கான கணக்கில் மாதந்தோறும் ஒதுக்கப்படும் தொகை ஜனவரி மாதத்துக்கு ஒதுக்கப்படவில்லை. அதனால் அவா்களுக்கு சம்பளம் போட இயலவில்லை. அந்த கணக்கில் எப்போது தொகை வரவு வைக்கப்படுகிறதோ அப்போது தான் அவா்களுக்கான சம்பளம் போட இயலும் என்கின்றனா். இதே நிலை நீடித்தால் 10-ஆம் தேதி ராணிபேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு மாவட்ட ஆசிரியா்கள் அனைவரும் கூடி போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பிரேமலதா கூறியது: இப்பிரச்னை குறித்து கருவூலத் துறை மற்றும் நிதித்துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்த துறைகளின் கணிணிகளை இயக்கும் தனியாா் நிறுவனத்திடமும் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவா்களுக்கான சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

SCROLL FOR NEXT