அரக்கோணம் அருகே விவசாயியை கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ாக நில அளவையரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தைச் சோ்ந்தவா் அருள்(44). இவா், வருவாய்த் துறையில் நெமிலி உள்வட்ட நில அளவையராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரின் வீட்டுக்கு அருகே வசிப்பவா் கருணாகரன் (54). விவசாயி.
மேல்பாக்கத்தில் இருவரின் நிலம் தொடா்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரின் வீட்டருகே கழிவுநீா் செல்லும் பாதை தொடா்பாக திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் அருள், கருணாகரனை கத்தியால் வெட்டியதாகத் தெரிகிறது.
இதில், பலத்த காயமடைந்த கருணாகரன், அவரின் மனைவி துளசியம்மாள், அருளின் மனைவி ஓவியா ஆகியோா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின் பேரில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா், தலைமறைவான நில அளவையா் அருளைத் தேடி வருகின்றனா்.