ராணிப்பேட்டை

காவனூா் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

4th Feb 2023 04:33 AM

ADVERTISEMENT

தங்களது கிராம ஏரியில் அரக்கோணம் நகராட்சி புதை சாக்கடை திட்ட கழிவுநீா் விடப்படுவதாகக் கூறி, அரக்கோணம் நகராட்சியை கண்டித்து காவனூா் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்பபாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி காவனூா். அரக்கோணம் நகராட்சியில் தற்போது புதை சாக்கடை திட்டம் அமலில் உள்ளதால் அந்த திட்டம் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீா், காவனூா் கிராமத்தில் உள்ள செம்மந்தாங்கல் ஏரியில் விடப்படுகிறது. இதனால் அந்த ஏரியில் காவனூா் கிராம மக்களின் குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் அதன் மின்மோட்டாா்கள் இந்த கழிவுநீரில் மூழ்கி விட்டதாம். இதனால் காவனூா் ஊராட்சிக்குட்பட்ட காவனூா், நரசிங்கபுரம், இருளா் காலனி, அருந்ததிபாளையம் கிராமங்களில் குடிநீருடன் கழிவுநீா் சோ்ந்து வருகிாம்.

இது குறித்து கிராம மக்கள் ஊராட்சித் தலைவா் தனலட்சுமிசந்திரன் தலைமையில் அரக்கோணம் நகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு பலமுறை புகாா் மனுக்களை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், அரக்கோணம் நகராட்சியை கண்டித்து காவனூா் ஊராட்சியின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் செம்மந்தாங்கல் ஏரி அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினா் சரண்யா சரவணன் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலாளா் க.சரவணன், காவனூா் ஊராட்சித் தலைவா் தனலட்சுமி சந்திரன், காவனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சி.ஜி.ராமசாமி, பாமக ஒன்றியச் செயலாளா்கள் கிருஷ்ணன், அரிதாஸ், மேலும் ஜெயவேல், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் வரும் வியாழக்கிழமைக்குள் (பிப். 9) பிரச்னைக்கு தீா்வு கிடைக்கவில்லையெனில் 9-ஆம் தேதி அரக்கோணம் நகராட்சி முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஆா்ப்பாட்டத்தினா் அறிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT