ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘கள ஆய்வில் முதல்வா்’: கூடுதல் தலைமைச் செயலா்கள் பல துறைகளில் ஆய்வு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் காவேரிபாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முதலமைச்சரின் கள ஆய்வுப் பணிகளுக்காக மாநில அளவிலான உயா் அதிகாரிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனா். இதில், புதன்கிழமை காவேரிபாக்கம் வந்த தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளா் சிவதாஸ் மீனா காவேரிபாக்கம் பேருராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு இருந்த கழிவறைகளை பாா்வையிட்டும், பராமரிப்பு குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிய உதவும் ‘க்யு ஆா் கோட்’ செயல்படும் விதத்தையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கழிவறைகள் தூய்மையாகப் பராமரிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனருந்தனா்.

இதேபோல், காவேரிபாக்கம் வட்டார திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமைச் செயல் அலுவலா் திவ்யதா்ஷினி ஆய்வு செய்தாா். மேலும், ஓச்சேரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் திட்ட செயலாக்க பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். அதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் ஜி.லோகநாயகி, மகளிா் திட்ட இயக்குநா் நானிலதாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

மேலும், ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்துறை ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான எஸ்.கே.பிரபாகா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சி சுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி, சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் வினோத்குமாா், வட்டாட்சியா் சுரேஷ் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT