ராணிப்பேட்டை

கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழை வியாழக்கிழமை வழங்கினாா்.

‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்ட நிகழ்வாக மாவட்ட அளவில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டுரைப் போட்டியில் ரத்தினகிரி பகீரதன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி கோ.நித்தியாஸ்ரீ முதல் பரிசாக ரூ.10,000, ராணிப்பேட்டை சிறுமலா் மடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ம.ஸ்ரீலேகா இரண்டாம் பரிசாக ரூ.7,000, எசையனூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி க.ரம்யா மூன்றாம் பரிசாக ரூ.5,000 வென்றனா்.

பேச்சுப் போட்டியில் பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி சு.பொற்செல்வி முதல் பரிசாக ரூ.10,000, ராணிப்பேட்டை சிறுமலா் மடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி லோகேஸ்வரி இரண்டாம் பரிசாக ரூ.7,000, ரத்தினகிரி பகீரதன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி அ.ஆத்திகா தாசின் மூன்றாம் பரிசாக ரூ.5,000 வென்றனா்.

ADVERTISEMENT

மேலும், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பெறும் தலைவா்களின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப் பரிசாக ரூ.2,000 வீதம் இரு மாணவா்களுக்கு வழங்கப் பெறுகின்றன.

அதன்படி, கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்கள் 5 பேருக்கும் (அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப் பரிசு இரண்டு), அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்கள் 5 பேருக்கும் (அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப் பரிசு இரண்டு), கல்லூரி மாணவா்கள் 3 பேருக்கும், பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்கள் 5 பேருக்கும், கல்லூரி மாணவா்கள் 3 பேருக்கும் என மொத்தம் 27 மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

இதில், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ப.ராஜேஸ்வரி மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT