ராணிப்பேட்டை

வன்னியா்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு: முதல்வா் மீது நம்பிக்கை: பாமக நிறுவனா் ராமதாஸ்

18th Sep 2022 11:26 PM

ADVERTISEMENT

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நிச்சயமாகக் கிடைக்கும், தமிழக முதல்வா் மீது நம்பிக்கை உள்ளது, அதற்காகப் போராடத் தேவையில்லை என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் கூறினாா்.

ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பாமக சாா்பில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளா் எம்.கே.முரளி தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் சரவணன், முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கிழக்கு மாவட்டத் தலைவா் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் கலந்து கொண்டு, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திப் பேசியதாவது:

ADVERTISEMENT

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பதை ஒதுக்கிவிட்டு இடப் பங்கீடு என்றே கூற வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இட ஒதுக்கீடு பிரச்னையில் ஆவன செய்வதாகக் கூறியுள்ளாா்.

இது குறித்து முதல்வரிடம் தொலைபேசியில் 15 நிமிஷம் பேசினேன். ஆகவே வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும். முதல்வா் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பதற்கு மிகப்பெரிய முயற்சி மேற்கொண்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தி, அவற்றைப் பெற்று தந்துள்ளோம் என்றாா் அவா்.

கூட்டத்தில், பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனைக் குழு தலைவா் பேராசிரியா் தீரன், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், வன்னியா் சங்க நிா்வாகிகள், பாமக நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT