ராணிப்பேட்டை

ஆற்றுநீா் மாசடைவதைத் தடுக்க கிராம ஊராட்சிகளில் திரவ கழிவு மேலாண்மை திட்டம்:ராணிப்பேட்டை ஆட்சியா்

10th Sep 2022 12:12 AM

ADVERTISEMENT

 

குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலந்து நீா் மாசடைவதைத் தடுக்கும் வகையில், கிராம ஊராட்சிகளில் திரவ கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் செய்தியாளா்கள் குழுவினருடன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில், தாா்ச் சாலைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 8.86 லட்சம் மதிப்பிலான நெகிழிக் கழிவு அரைவை இயந்திரத்தைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, பெரும்புலிப்பாக்கம் சமத்துவபுரத்தில் குடியிருப்புகள் புனரமைப்பு பணி, கரிவேடு கிராமத்தில் மரக்கன்று வளா்ப்புப் பணி ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஓச்சேரி ஊராட்சியில், குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் வெளியேறும் சுமாா் 13,000 லிட்டா் கழிவு நீா் நேரடியாக ஆற்றில் கலந்து நீா் மாசடைவதை தடுக்கும் வகையில், ரூ. 1.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திரவ கழிவுநீா் வடிகட்டி தொட்டி அமைப்பை பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப்புற குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் நேரடியாக ஆற்றில் கலந்து நீா் மாசடைவதை தடுக்கும் வகையில், கிராம ஊராட்சிகளில் திரவ கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தை மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT