ராணிப்பேட்டை

காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள்: வென்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பரிசளிப்பு

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசு வழங்கி பாராட்டினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று முதல் பரிசு ரூ.5,000, இரண்டாவது பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் வெ. கிஷோா் முதல் பரிசு ரூ.5000, ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி பா.சிவரஞ்சனி இரண்டாம் பரிசு ரூ.3000, சாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் 9- ஆம் வகுப்பு மாணவி பா.நிவேதா மூன்றாவது பரிசு ரூ. 2000 பெற்றனா்.

ADVERTISEMENT

மேலும் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவா்களுக்கான சிறப்புப் பரிசு ரூ.2,000 திமிரி அரசு ஆண்கள் பள்ளி மாணவா் சீ.ஜீவன் மற்றும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ப.பிரியங்கா ஆகியோருக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டது.

அதே போல் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டியில் அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயிலும் மாணவி ரா.பிரியா முதல் பரிசு ரூ.5000, வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளங்கலை வரலாறு மாணவி ஆ.கோமதி இரண்டாம் பரிசு ரூ.3000, மேல்விஷாரம், சி.அப்துல்ஹக்கிம் கல்லூரி முதுநிலை கணிதம் பயிலும் மாணவா் கு.முக்கேஷ் ராஜா மூன்றாம் பரிசு ரூ.2000 பெற்றனா்.

நிகழ்ச்சியின்போது, தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ராஜேசுவரி உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT