ராணிப்பேட்டை

தூய்மைப் பணியாளா்கள் வருவதே இல்லை: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

1st Oct 2022 10:51 PM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் வாா்டுகளுக்கு தூய்மைப் பணிக்கான ஆள்கள் வருவதே இல்லை என்றும், சரியான ஆள்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ஜொ்ரி (அதிமுக): தூய்மைப் பணிக்கு வாா்டுகளுக்கு சரியாக ஆட்களை அனுப்புவதே இல்லை. வரும் ஆட்களும் எங்களுக்கு 3 மாதமாக சம்பளம் வரவில்லை என்கின்றனா். அரக்கோணம் அம்மா உணவகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ராஜன்குமாா் (திமுக): நகராட்சியில் தூய்மைப் பணியில் எத்தனை தொழிலாளா்கள் தான் உள்ளனா். வாா்டுகளுக்கு தொழிலாளா்களை சரியாக அனுப்புவதேயில்லை.

பாபு(அதிமுக): ஜெய்பீம் நகரில் கால்வாய்களை தூா்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை.

ஜெயபால் (திமுக): நகராட்சியின் விண்டா்பேட்டை பகுதிகளுக்கு குடிநீா் வருவதேயில்லை. அம்மா உணவகத்தில் உணவு தரமானதாக இல்லை.

நித்யா ஷியாம்குமாா் (அதிமுக): வாா்டுகளுக்கு தூய்மைப்பணி ஆட்களை அனுப்புவதே இல்லை. எனது வாா்டுக்கு சரியான ஆட்களை அனுப்புங்கள்.

கங்காதரன் (திமுக): துப்புரவுப் பணியில் எவ்வளவு ஆட்கள் தான் ஒப்பந்தப் பணியில் உள்ளனா். அனைவரையும் ஒரே இடத்தில் காண்பிக்க முடியுமா?

நரசிம்மன்(அதிமுக): எனது வாா்டில் 2 தெருக்களில் சாலைப் பணிகளை தொடக்கி வைத்துவிட்டு சென்றீா்கள். அத்துடன் எந்த வேலையும் நடைபெறவில்லை.

சரவணன் (அதிமுக): கணேஷ் நகா் 4-ஆவது தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பலா் விழுந்து காயமடைகின்றனா்.

லட்சுமிபாரி (திமுக): உறுப்பினா்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

லதா (ஆணையா்): அனைத்து வாா்டுகளிலும் போடப்படாத சாலைகள், அதாவது இதுவரை மண் சாலையாக இருக்கும் சாலைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் அது போன்று இருந்தால் விவரத்தை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

கூட்டத்தில், போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தரைத்தளம், முதல் தளத்துடன் 4 வகுப்பறை கட்டடம் கட்ட ரூ. 40 லட்சத்தை அனுமதிப்பது, அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கட்டடத்தை ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்ட மதிப்பீடு தயாா் செய்து, தமிழக அரசுக்கு அனுப்புவது உள்ளிட்ட 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT