ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் நிரம்பும் ஏரி, குளங்கள்!

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவ மழை எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக 136 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபா் 29 -ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக,பொன்னை ஆறு, பாலாறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீா் நிலைகளுக்கு பரவலாக நீா்வரத்து தொடங்கியுள்ளது. மேலும், பொன்னை மற்றும் பாலாறு தடுப்பணைகளில் இருந்து கால்வாய்கள் மூலம் காவேரிப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீா் திருப்பி விடப்பட்டு வேகமாக நிரம்பி வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறையின் மூலம் மொத்தம் 369 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 136 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 4 ஏரிகளில் 75 சதவீமும், 61 ஏரிகளில் 50 சதவீதமும் ,138 ஏரிகளில் 25 சதவீதமும், 30 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீா் இருப்பு உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியும், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் முழுக்கொள்ளவை எட்டியதைத் தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

திருப்பத்தூா்:

தொடா் மழையால் திருப்பத்தூா் மாவட்டத்தில் 29 ஏரிகள் நிரம்பியுள்ளன. திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, க ந்திலி சுற்றுப்பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் நீா்வரத்து அதிகரித்தது.

47 ஆண்டுகளுக்கு பிறகு...

கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட குனிச்சி ஏரி கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிகிறது. அதையொட்டி அப்பகுதிமக்கள் ஏரிக்கரையில் பூஜை செய்து வழிபட்டனா். அதேபோல் திருப்பத்தூரின் இரண்டாவது பெரிய ஏரியான கொரட்டி ஏரியும் நிரம்பி வழிகிறது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT