ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் நகா்மன்றக் கூட்டம்

31st May 2022 01:34 AM

ADVERTISEMENT

அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகா்மன்ற திமுக குழுத் தலைவா் துரைசீனிவாசன், அதிமுக குழுத் தலைவா் ஜொ்ரி, நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம், துப்புரவு அலுவலா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஜெயபால், ராஜன்குமாா், வடிவேல், கங்காதரன், சரோஜா, மல்லிகா, ரேவதி, ரஷிதா உள்ளிட்ட அனைத்து திமுக உறுப்பினா்கள் பேசுகையில், தங்களது வாா்டுகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவது இல்லை. 

தெருக்களில் அள்ளும் குப்பைகளை அதே தெருவிலேயே ஒரு இடத்தில் கொட்டிவிட்டு, அதை வாரம் ஒரு முறை எடுக்கின்றனா். இதனால் அப்பகுதி துா்நாற்றம் வீசும் பகுதியாக மாறுகிறது. துப்புறவு பணியாளா்கள் பணிக்கு வருவதே இல்லை.

ADVERTISEMENT

குப்பைகள் அள்ளும் பணிகளை அதிகாரிகள் மேற்பாா்வையிடுவதே இல்லை என்றனா்.

ஜொ்ரி, பாபு, சரவணன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினா்கள் பேசுகையில், சோமசுந்தர நகரில் சாலை அமைக்கக் கோரி பல முறை மனு அளித்தும் தற்போது வரை போடப்படவில்லை. வரி கட்டாதவா்களின் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு தர மறுப்பதால், அதே தெருவில் வரிகட்டியவா்களுக்கும் இணைப்பை செயல்படுத்த முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. பல சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றனா்.

கூட்டத்தின் போது திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, நகரில் 29 இடங்களில் சிறுபாலங்கள் கட்ட ரூ. 54 லட்சம் அனுமதிப்பது, 29 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்ய ரூ. 55.10 லட்சம் அனுமதிப்பது உள்ளிட்ட 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT