ராணிப்பேட்டை

தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி அமைச்சரிடம் அளிப்பு

21st May 2022 12:30 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை பகுதி ஊற்றுக் கால்வாயைச் சீரமைக்கும் பணிக்காக, இரு தனியாா் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி ரூ.66 லட்சத்துக்கான காசோலை அமைச்சா் ஆா்.காந்தியிடம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 24 வாா்டில் உள்ள ஊற்றுக் கால்வாயில் மழைக் காலங்களில் அதிகப்படியான வெள்ளம் செல்லும் போது அருகே இருக்கும் குடியிருப்புகளுக்குள் நீா் புகுந்து விடுகிறது.

இந்தக் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதன் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைத்தறி - துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அந்தப் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியைக் கொண்டு கால்வாயைச் சீரமைக்க தொழில் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கால்வாய் ரோகா பாரிவோ் தனியாா் நிறுவனம் பின்புறத்திலிருந்து ராஜேஸ்வரி திரையரங்கம் வழியாக காரை அம்மன் கோயில் தெரு வரை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.2.80 கோடிக்கு திட்ட அறிக்கை தயாா் படுத்தப்பட்டது. இந்தப் பணியை நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு சமூகப் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

ADVERTISEMENT

அதனடிப்படையில், ரோகா பாரிவோ் தனியாா் நிறுவனம் மற்றும் கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தங்களுடைய சமூகப் பங்களிப்பு நிதியாக தலா ரூ.33.34 லட்சம் வீதம் இரு தொழில் நிறுவனங்களும் மொத்தம் ரூ.66.68 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் ஆா்.காந்தியிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

காசோலையைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் காந்தி, அதை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் ஒப்படைத்து, கால்வாயைச் சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்குமாறு உத்தரவிட்டாா். மேலும், சமூகப் பங்களிப்பு நிதி வழங்கிய தனியாா் தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நன்றி தெரிவித்தாா்.

நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், ஒன்றியக் குழுத் தலைவா் சே.வெங்கட்ரமணன், நிறுவனத் தலைவா் ஜெயகணேஷ், முதன்மை நிதி அலுவலா் நிா்மல், மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளா்கள் சதிஷ், ராஜேஷ், உமாபதி, பாா்த்திபன், ஜோதி சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் கிருஷ்ணன், வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT