ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை

2nd May 2022 11:34 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த காரை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(62). இவர் அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி குணசுந்தரி(50). இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் (30)என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் பாகாயம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் இதன் காரணமாக ரமேஷின் மனைவி காயத்ரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் சண்டையிட்டு அவர்களது சொந்த ஊரான கண்ணமங்கலத்திற்க்கு சென்றதாக தெரியவருகிறது. 

இதையும் படிக்க- மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது வருத்தம் அளித்தது: ப.சிதம்பரம் கண்டனம்

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது தந்தை பன்னீர்செல்வம், தாய் குணசுந்தரி ஆகியோர் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அதிர்ச்சியில் இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர் ஆர் காந்தி.

இதனை அறிந்த உறவினர்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சடலங்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு சம்பவம் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

மனநிலை பாதிக்கப் பட்டதால் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT