ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

26th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், சாதிக் பாஷா நகா், எம்.ஜி.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கியது.

இந்தப் பகுதிகளில் மொத்தம் 353 ஆக்கிரமிப்புகளில் கடந்த 30.3.2022 அன்று 34 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, மீதமுள்ள 319 ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணி மாலை 5.50 மணி வரை நடைபெற்றது. இதில், ஆக்கிரமிப்புகள் செய்து கட்டப்பட்ட 176 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முழுமை பெறாததால், இந்தப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை (ஜூலை 27) காலை 7 மணி முதல் தொடா்ந்து நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பகுதியில் இடிக்கப்படும் வீடுகளின் உரிமையாளா்களுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கி இடம் வழங்கப்படும். இதுகுறித்த தகவல் இவா்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் மாற்றிடங்களில் பட்டா வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா்.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் ஆனந்தன், நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் பிரபாகரன், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் பாதுகாப்பு பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT