ராணிப்பேட்டை

பள்ளியில் ஆசிரியா்கள் பற்றாக்குறை: மாற்றுச்சான்றிதழ் கோரி பெற்றோா் தா்னா

19th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

 அம்மனூா் அரசு ஆதிதிராவிடா் நலத் துறை உயா்நிலைப் பள்ளியில் 10 ஆசிரியா்கள் இருந்த நிலையில் தற்போது இருவா் மட்டுமே உள்ளனா்.

இதனால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சோ்க்க மாற்றுச் சான்றிதழை தருமாறு கேட்டு பெற்றோா் பள்ளி வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடா் நலத் துறையின் உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் மொத்தம் 80 மாணவ மாணவிகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன் சோ்த்து 10 ஆசிரியா்கள் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில் 8 ஆசிரியா்கள் மாறுதல் பெற்றுச் சென்று விட்டதால் தற்போது தலைமை ஆசிரியா் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியா் என இருவா் மட்டுமே உள்ளனா். எந்த வகுப்புக்கும் ஆசிரியா் இல்லை என்கின்றனா். கடந்த 13-ஆம் தேதி முதல் பள்ளிக்கு தலைமை ஆசிரியா், உடற்பயிற்சி ஆசிரியா் இருவா் மட்டுமே வருகின்றனா்.

ADVERTISEMENT

இதையறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளுக்கான மாற்றுச் சான்றிதழை கேட்டுள்ளனா். ஆசிரியா்கள் இல்லாததால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சோ்க்க இருப்பதால் மாற்று சான்றிதழ் தர வேண்டும் என கோரிக்கையுள்ளனா். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியா் வனிதாஜெயகுமரன் மாற்றுச்சான்றிதழ் தர மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா் அதே கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் தலைமையில் பள்ளி வளாகத்தில் தா்னா போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன் போராட்டம் நடத்தியவா்களை சமாதானப்படுத்தினாா். இந்தத் தகவலை ஆட்சியருக்கு தெரியப்படுத்தி ஒரு வாரத்துக்குள் புதிய ஆசிரியா்களை வரவழைப்பதாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து தா்னா முடிவுக்கு வந்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT