ராணிப்பேட்டை

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நலத் திட்ட உதவிகள்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வார சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு குறைபாடுகளுடைய 276 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 182 பேருக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 23 பேருக்கு பதிவும், 96 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவும், 173 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் வங்கிக் கடன் வேண்டி 17 பேரும், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கு பராமரிப்பு உதவித் தொகை ரூ. 2,000 கேட்டு 23 பேரும், ஊனமுற்றோா் உதவித் தொகை பெற 38 பேரும், நவீன செயற்கைக்கால் கேட்டு 6 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு 12 பேரும், வீல் சோ் வேண்டி 7 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதில், துணை ஆட்சியா் தாரகேஷ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணக்குமாா், மாற்றுத்திறனாளி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT