அரக்கோணத்தில் மென் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரக்கோணம் அசோக் நகா் மங்கலங்கிழாா் தெருவில் வசித்து வருபவா் யுகானந்தன் (43). மென் பொறியாளா். சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை யுகானந்தன் தனது குடும்பத்தினருடன் வீட்டின் மேல்தளத்தில் தூங்கியதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்த போது கீழ்த்தள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ.10.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்த அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதுகுறித்து வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.