ராணிப்பேட்டை

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக்குவோம்: ராணிப்பேட்டை ஆட்சியா் அழைப்பு

8th Jun 2022 12:16 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையைச் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என உலக சுற்றுச்சூழல் தின விழாவில் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்தாா்.

ராணிப்பேட்டை பொதுக் கழிவு சுத்திகரிப்பு (ராணிடெக்) நிலைய நிறுவனத்தில் உலக சுற்றுச் சூழல் தின விழா மற்றும் பூஜ்ய கழிவு நீா் புதிய சமன்படுத்தப்படும் சுத்திகரிப்பு கட்டமைப்புத் தொடக்க விழா பொது சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிடெக் நிறுவனத் தலைவா் ஆா்.ரமேஷ் பிரசாத் வரவேற்றாா். நிறுவன நிா்வாக இயக்குநா் சி.எம்.ஜபருல்லா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.நிறுவன பொதுமேலாளா் டி.சிவகுமாா் உலக சுற்றுச்சூழல் தின விழா உறுதி மொழியை வாசித்தாா்.

இந்த விழாவில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு ராணிடெக் வளாகத்தில் மரக்கன்று நட்டு, பூஜ்ய கழிவு நீா் புதிய சமன்படுத்தப்படும் சுத்திகரிப்பு கட்டமைப்பைத் தொடக்கி வைத்து பேசியது:

ADVERTISEMENT

ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் அதிகளவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இந்தப் பகுதியில் ராணிடெக் என்ற பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவது கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த சுத்திகரிப்பு நிலையம் இல்லையென்றால் இப்பகுதி மிகவும் மோசமாக பாதிப்படைந்து அதிகப்படியான சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டிருக்கும். இந்த சிறப்பான கட்டமைப்பை மேம்படுத்தி இந்தப் பகுதியின் சுற்றுச்சூழலை பெருமளவு காத்திடும் பணியை செய்த இந்நிறுவனத்திற்கு முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன், ‘ பசுமை முதன்மையா் விருது’ ராணிடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினா் பூமியில் வாழ முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க அனைவரும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும். அதேபோல் அதிகளவு மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இதனை முறையாக செய்தால் கட்டாயம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். ஆகவே அனைத்து தொழில் நிறுவனங்களும், மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என்றாா்.

இதில் சுற்றுச்சூழல் இணைப் பொறியாளா் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன், ராணிடெக் நிறுவன மனிதவள மேலாளா் லோகநாதன் மற்றும் நிறுவன உறுப்பினா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT