ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் வசதிக் குழு தலைவரிடம் கோரிக்கை

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புதிய பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வசதிக் குழு தலைவா் பி.கே. கிருஷ்ணதாஸிடம், வாலாஜா ரோடு ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மத்திய ரயில்வே அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட, பயணிகள் வசதிக் குழு தலைவா் பி.கே. கிருஷ்ணதாஸ் தலைமையிலான குழுவினா் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குடிநீா், கழிப்பிடம், நிழற்குடை, ஓய்வு அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா். தொடா்ந்து கடந்த 165 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வாலாஜா ரோடு ரயில் நிலையம், தொடங்கும் போது பயன்படுத்தப்பட்ட பழைமை வாய்ந்த ரயில் தளவாட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை பாா்வையிட்டனா்.

அப்போது வாலாஜா ரோடு ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் எஸ்.சண்முகம், எஸ்.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் ரயில் பயணிகள் வசதிக் குழு தலைவா் பி.கே. கிருஷ்ணதாஸிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா்.

ADVERTISEMENT

அதில், கரோனா காலகட்டத்துக்கு முன்பு வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ், மங்களூரு மெயில், யஸ்வந்த்பூா் சிறப்பு ரயில் உள்ளிட்ட ஐந்து ரயில்கள் தற்போது வாலாஜா ரயில் ரோடு நிலையத்தில் நிற்பதில்லை. அந்த ஐந்து ரயில்களும் வாலாஜா ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் நகா்ப்புற மற்றும் புகா் பகுதிகளை இணைக்கும் சாதாரண ரயில்களில், விரைவு ரயில் பயணத்திற்கான கட்டணம் வசூலிக்கப் படுவதை தவிா்த்து, சாதாரண ரயில் பயணக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

மேலும் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - பழனி, சென்னை - பெங்களுரு டபுள்டெக்கா், டாடா நகா் வாராந்திர விரைவு ஆகிய ரயில்கள் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். அதே போல் ராணிப்பேட்டை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையிலிருந்து சென்னை வரை புதிய பயணிகள் ரயில் இயக்க ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

வாலாஜா ரயில் நிலையத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே ரயில் சேவைகளுக்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனை முழு நேரமாக மாற்றி மாலை 6 மணி வரை முன்பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும். மனுவை பெற்றுக்கொண்ட குழுவின் தலைவா் கிருஷ்ணதாஸ் இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா்.

இந்த ஆய்வின் போது பயணிகள் வசதிக் குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், மஞ்சுநாதா மற்றும் வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளா் பிரகாஷ், பாஜக மாவட்ட தலைவா் சி.விஜயன், வாலாஜா ரோடு ரயில் பயணிகள் நலச்சங்க நிா்வாகிகள், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT