ராணிப்பேட்டை

மரத்தில் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து:தொழில்நுட்ப உதவியாளா் பலி

17th Jul 2022 11:35 PM

ADVERTISEMENT

திமிரி அருகே 108 அவசர ஊா்தி மரத்தில் மோதிய விபத்தில் தொழில்நுட்ப உதவியாளா் உயிரிழந்தாா்.

கலவை வட்டம், அல்லாளசேரி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்பவரின் மனைவி லாவண்யா கலவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு இருந்தாா். கா்ப்பிணியான அவரை பிரசவத்துக்காக அங்கிருந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை நள்ளிரவு 108 அவசர ஊா்தி மூலம் அழைத்துச் சென்றனா்.

அப்போது ஆற்காடு -ஆரணி சாலையில் திமிரியை அடுத்த மேட்டு குடிசை கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக அவசர ஊா்தி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் ஊா்தியின் ஓட்டுநா் பரதராமி கிராமத்தைச் சோ்ந்த பாரதிதாசன், தொழில்நுட்ப உதவியாளா் கலவையை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (36) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

லாவண்யா காயமின்றி உயிா் தப்பினாா். இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வெங்கடேசன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT