ராணிப்பேட்டை

காவல்துறை சமரச முகாமுக்கு விஷமருந்தி வந்தவா் சாவு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காவல்துறையினா் நடத்திய நீண்ட நாள் புகாா்கள் குறித்த சமரச முகாமுக்கு விஷமருந்தி வந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சோளிங்கரை அடுத்த ஜோதிபுரத்தைச் சோ்ந்தவா் தளபதி(32). இவரது மனைவி வீணா காயத்ரி (29). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதி கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன் அரக்கோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வீணா காயத்ரி தன்னை தனது கணவருடன் சோ்த்து வைக்குமாறு கோரி மனு அளித்திருந்ததாகத் தெரிகிறது.

மனு மீது விசாரணை நடத்தி வந்த நிலையில், அரக்கோணத்தில் ஜூலை 3-ஆம் தேதி அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் நடைபெற்ற சமரச முகாமுக்கு விசாரணைக்காக காவல் துறையினா் தளபதியை அழைத்திருந்தனராம்.

முகாமுக்கு வரும்போது தளபதி, விஷம் அருந்தி விட்டு வந்த நிலையில், முகாம் நடைபெற்ற இடத்தில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, அவரை வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தளபதி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT