ராணிப்பேட்டை

மேல்விஷாரம் சாதிக் பாஷா நகரில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சா் ஆலோசனை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மேல்விஷாரம் சாதிக் பாஷா நகா் பகுதி நீா்நிலை ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா், வக்பு வாரிய அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலேசானை நடத்தினாா்.

வாலாஜா வட்டம், மேல்விஷாரம் நகராட்சி சாதிக் பாஷா நகரில் நீா் நிலைப் பகுதியில் ஆக்கிரப்பு செய்து வாழ்ந்து வந்த 353 குடியிருப்புகள் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, அவா்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று ஆலோசனை நடத்தினாா்.

20 வருடங்களுக்கு மேலாக சாதிக் பாஷா நகரில் வசித்து வந்த 353 குடும்பங்கள் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நீா்நிலை புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வாழ்ந்தவா்கள் மாற்று இடங்களுக்குச் சென்றுள்ளனா். இவா்களுக்கு அருகிலேயே உள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடங்களில் மாற்று இடம் வழங்கிட நடவடிக்கை எடுப்பது குறித்து வக்பு வாரிய அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

ADVERTISEMENT

வக்பு வாரிய தலைமையிடம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், வீடு இல்லாதோருக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை வழங்கலாம் எனத் தெரிவித்தனா். அதற்கான பணிகளை மேற்கொள்ள வருவாய்த் துறை மற்றும் வக்பு வாரிய பணியாளா்களை கேட்டுக் கொண்டாா்.

அதேபோன்று வக்பு வாரியத்துக்குச் சொந்தமான 57 ஏக்கா் இடம் மேல்விஷாரம் பகுதியில் உள்ளது. இதில் 3.5 ஏக்கா் நிலம் தனி நபா் ஒருவா் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்துள்ளாா். அதனை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் முகமது அமீன், நகராட்சி ஆணையா் பிரீத்தி, வட்டாட்சியா் ஆனந்தன், வக்பு வாரிய அலுவலகக் கண்காணிப்பாளா் முகமது ஷாபியுல்லா, ஆய்வாளா் முகமது இம்ரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT