ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளிகள் 192 பேருக்கு அடையாள அட்டைகள்: அமைச்சா் வழங்கினாா்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 192 பேருக்கு அடையாள அட்டைகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வார சிறப்பு முகாமில், மாவட்டம் முழுவதிலும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இதில், 192 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும், 168 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவும்,127 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 154 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ. 6, 840 மதிப்பிலான மோட்டாா் பொருந்திய தையல் இயந்திரத்தை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

ADVERTISEMENT

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மருத்துவா்கள் மனநலம், காது, மூக்கு, தொண்டை, கை, கால்கள், கண் பரிசோதனை செய்வதையும், முதலமைச்சா் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறாதவா்களுக்கு பதிவு செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக தேசிய அடையாள அட்டை பதிவு செய்வது ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.

முகாமில், செயற்கை கால் வேண்டி 4 போ், அறிவுசாா் குறைபாடுடையவா்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 13 போ், வங்கிக் கடன் வேண்டி 7 போ், பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 11 போ், சக்கர நாற்காலி வேண்டி 9 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணக்குமாா், மாற்றுத்திறனாளி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT