ராணிப்பேட்டை

தற்காலிக ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்

4th Jul 2022 11:24 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் திங்கள்கிழமை ஆா்வமுடன் திரண்டு வந்து விண்ணப்பித்தனா்.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக்களே நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது. அதன்படி, தற்காலிக ஆசிரியா் பணிக்கு ஜூலை 6- ஆம் தேதி வரை (புதன்கிழமை) மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையா் தெரிவித்தாா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்குத் தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான காலி பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்டம் முழுவதுதிலும் இருந்து 100-க்கணக்கான பட்டதாரிகள், மாவட்டக் கல்வி அலுவலத்துக்கு திரண்டு வந்து தங்களின் குடிருப்புக்கு அருகே உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT