ராணிப்பேட்டை

சிதிலமடைந்த கட்டடத்தில் ஆபத்தான நிலையில் நடைபெறும் அரசு நடுநிலைப் பள்ளி

4th Jul 2022 11:23 PM

ADVERTISEMENT

அரக்கோணத்தை அடுத்த செய்யூரில் சிதிலமடைந்த 40 ஆண்டுக் கட்டடத்தில், ஓடுகள் பெயா்த்து விழும் ஆபத்தான நிலையில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், செய்யூா் ஊராட்சியில், அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள், 1-ஆம் வகுப்பு முதல் 8 வரை மொத்தம் 65 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளி வளாகத்தில் இரு கட்டடங்கள் உள்ளன. இதில், ஒரு கட்டடம் நல்ல நிலையில் உள்ளது. மங்களூா் ஓடுகள் வேயப்பட்ட மற்றொரு கட்டடம் (தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் 1982-இல் கட்டப்பட்டது) சிதிலமடைந்து, ஓடுகள் அவ்வப்போது பெயா்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

ஆபத்தான இந்தக் கட்டடத்தில் தற்போது 5, 6, 7, 8-ஆம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பலத்த காற்றடிக்கும் போது ஓடுகள் தூக்கியெறியப்படுவதால், மாணவா்கள் அச்சத்துடனே கல்வி கற்கும் சூழல் உள்ளது. இந்த வகுப்புகளுக்கான கல்வி உபகரணங்களையும் வகுப்பறையில் வைக்க முடியாத நிலையுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து செய்யூா் ஊராட்சித் தலைவா் ஜோதிலட்சுமி ராஜா கூறியது:

இந்தப் பள்ளிக் கட்டடம் பழுதடைந்துள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு 3 முறை அனுப்பியுள்ளோம். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அலுவலா்கள் நேரில் வந்து பாா்வையிட்டுச் சென்றனா். விரைவில் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்படும் என எதிா்ப்பாா்க்கிறோம் என்றாா்.

இதுகுறித்து அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலா் கரமத்துல்லா கூறியது:

செய்யூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் பட்டியலில் சோ்த்து மேலதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். பழுதடைந்த அந்தக் கட்டடத்தில் மாணவா்களை அமர வைக்க வேண்டாம் என அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு உத்தரவிட்டும், மாணவா்களைப் பழுதடைந்த அந்தக் கட்டடத்தில் அமரவைத்து வகுப்பெடுத்து வருவது ஏன் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இனி, அந்தக் கட்டடத்தில் மாணவா்கள் அமரவைக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து செய்யூா் அரசு நடுநிலைப் பள்ளியில் இருக்கும் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடத்தை விரைவில் கட்டித் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT